Wednesday, 7 January 2026

சின்னப் பயலே நின்னு கேளடா!

சின்னப் பயலே நின்னு கேளடா!

சின்னப் பயலே சின்னப் பயலே!
நின்னு கேளடா!நான்
சொன்னப் பிறகு எண்ணி அதனை
மனதில் வையடா!நீ
மனதில் வையடா!

உன்னை நீயும் உயரம் பார்த்தும்
அளந்து பார்க்கணும்.அதற்கு
உன்னை வளர்க்க உதவும் பிறரை
உறவு தேடணும்.உன்
தோளும் தோளும் உரசும் தோழமை
உனக்கும் கூடனும்நீ .
நாளும் மேலும் வாழும் வாழ்வை
நாடி ஓடனும்.

உயரம் பார்த்தும் உன்னை நீயும்
உயர்த்திக் கொள்ளடா.- உன்னில்
உயர்ந்த மனிதரை மதித்து நீயும்
உறவு செய்யடா.உன்னை
ஒப்பும் உயரமும் செப்பும் தரமும்
உயர்த்தும் தானடாஇதை
உணர்ந்து நீயும் உன்னை வளர்த்து
உயர வேணுன்டா!

வாழ்ந்தும் நீயும் பாரடா-- புரியும்
வாய்ப்பும் வசதியும்உன்னை
அளந்தால் தானது உனக்கும் தெரியும்.
வாழ்வும் தாழ்வும்—முன்னை
உயர்ந்தவன் உன்னை வென்றான் என்பான்.
அவனை உயர்ந்தால்--உன்னை
அவனே தன்னை வென்றாய் என்பான்.
விளங்கிக் கொள்ளடா!

கொ.பெ.பி.அய்யா.`

Friday, 2 January 2026

கள்ளும் காமமும்

கள்ளும் காமமும்

சொல்லுவ தெல்லாம்
சொல்லி முடித்தும்
கள்ளுங் காமமும்
கலந்திடத் துணிந்தேன்.

காமம் மிகுந்தால்
நாணம் மறக்கும்.
கள்ளும் மிகுந்தால்
எல்லாம் மறக்கும்.

நினைந்திடக் காமம்
நெஞ்சை மயக்கும்.
அருந்திடக் கள்ளும்
அறிவை மயக்கும்.

ஊடலைக் காமம்
ஒளித்தே மறைக்கும்
கூடலைக் கள்ளும்
குழிக்குள் புதைக்கும்.

பிரிவினிற் காமம்
பெருகி உருக்கும்.
பருகிடக் கள்ளும்
உருக்கி யழிக்கும்.

காமம் துணிந்தால்
ஏமம் உடைக்கும்.
கள்ளும் முனைந்தால்
கோமணம் இழக்கும்.

சுற்றமும் மறக்கும்
முற்றியும் காமம்.
பெற்றவள் வெறுக்கவும்
பற்றிடுங் கள்ளும்.

அலரிய காமம்
களம் அறியாது.
உளற்செய் கள்ளும்
ஒழுக் கறியாது.

மிஞ்சிய காமம்
நெஞ் சடங்காது.
விஞ்சிடக் கள்ளும்
வெறி ஒடுங்காது.

பொருந்தாக் காமம்  
புலம்பித் திரியும்.
அருந்தாக் கள்ளும்
அவனைச் சொரியும்.

காமம் தொலைந்திட
கலங்கிடும் சித்தம்.
கள்ளும் நிறைந்திட
விலங்கிடும் பித்தம். 

காமம் மறந்தும்
கள்ளும் உண்டும்
சண்டைக்கு முனையுமீ
சண்டாளன் ஏனோ!

வாழ்வைத் தொலைத்தும்
வசையினைச் சுமந்தும்
நாளினை இழந்தும்
நடை பிணம் ஏனோ!

உழைப்பினை விற்று
உயிரினைத் தோற்று
அழையாச் சாவை
அழைப்பதும் ஏனோ!


கொ.பெ.பி.அய்யா.

பி.கு;-கள் எனும் சொல் பொதுவாக மதுவகைக்
குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது.