Sunday, 16 March 2014

எல்லாம் இரண்டே.

எல்லாம் இரண்டே!!

நேரும் எதிரும் நிலவாதிங்கே  
நிசங்கள் இல்லை இயற்கையிலே.
சேரும் சேரா எண்ணாதிங்கே
செம்மை இல்லை படைப்பினிலே.

காற்றும் நீரும் வேண்டாமலே
ஆற்றும் உயிர் இங்கில்லை.
சூடும் குளிரும் தீண்டாமலே
சுகமும் இல்லை பூமியிலே!

கருப்பு வெள்ளை மூலமில்லா
கண்கள் இரண்டில் காட்சியில்லை.
விருப்பு வெறுப்பு விளக்கமில்லா
அற்புதம் ஏதும் இங்கில்லை.

வானும் மண்ணும் இரண்டுமில்லா
வளமுமில்லை இயற்கையிலே
ஆணும் பெண்ணும் இரண்டுமில்லா
வாழ்வுமில்லை படைப்பினிலே.

இன்பம் துன்பம் கலப்பில்லாமல்
இங்கும் வாழ்க்கை இதமில்லை.
காதல் மோதல் உரசாமல்
கடக்கும் பயணம் சுவையில்லை.

இப்படி அப்படி என்றே எல்லாம்
இரண்டு விதமும் சமாதானம்.
பழகும் இலக்கணம் .ஏற்பதால்
பிழையும் சரியே நன்மையெனில்.

எல்லாம் இரண்டாய் இருப்பதினாலே
வல்லான் படைப்பும் வாழுதிங்கே.
அல்லும் பகலும் தொடர்வதினாலே
இல்லை சலிப்பும் இனிதே சுகமே!


கொ.பெ.பி.அய்யா.

Thursday, 13 March 2014

வண்ணப் பொய்.

வண்ணப்பொய்!

என்னை நான் அறியவும் இன்னும் புரியவில்லை
உன்னை யேன்  புரியவும் உணர்கிறேன் அறியவில்லை.
கண்ணை நான் கேட்கிறேன் காண்ணாடி முன்னே
என்னை நான் பார்க்கிறேன் என்ன தான் கண்ணே?

யாருக்கும் யாரும் நேரென்றும் இல்லை
பேருக்குப் பேரும் பொருளொன்றும் இல்லை.
அவரவர் தானே அவரவர் ஆவார்
அடையாளம் ஒன்றில் அவராகியிருப்பார்.

அடித்தாலும் அணைத்தாலும் அழியாது தடமே
படித்தாலும் தடித்தாலும் பழகாது இடமே
இயல்பான குணமொன்று எப்போதும் நிசமே
அயலான பயிற்சியெல்லாம் அமையாது வசமே!

கல்வியென ஒன்றது கருத்துக்குத் தெளிவுதான்.
சொல்வதில் கண்டதுவும் சுயத்திற்கு அறிவுதான்.
தன்னிலை என்பதில் பின்னிலை நேராது.
ஒன்னிலை ஒருவற்குள் என்னிலையும் மாறாது.

நாயெனப் பிறந்ததை நன்றிக்கு நம்பலாம்`
நரியெனப் பிழைப்பதைத் தந்திரம் எண்ணலாம்.
பாயும் புலிகண்டும் உயிர்காக்க ஓடலாம்.
பொய் வண்ண மனிதனிடம் என்னவென்றும் தப்பலாம்?

சொல்லினில் வருவதை சுயமென நம்புவது
கல்லினில் விளைவதைக் கதையெனச் சொல்வது
உள்ளிருக்கும் உள்ளதை உதடுகளில் மறைவதை
சொல்லெடுக்கக் கற்றவரார்?
முள்ளெடுக்க உற்றவரார்?

புரியாத புதிரொன்றும் புவியினில் உண்டென்றால்
குறியிலாப் படைப்பொன்றும் குறிப்பிடக் கூடுமென்றால்
அறிந்திட விளங்காத அதிசயம் ஒன்றென்றால்
தெரிந்திட மனிதெனென திரிந்திடும் இனமன்றோ!

கொ.பெ.பி.அய்யா.