Tuesday, 18 February 2014

பாராட்டும் பலவிதங்கள்.

பாராட்டுக்கள் பலவிதங்கள்!

பாராட்டுக்கள் எல்லாமே
பாராட்டும் அல்லவே.
சீராட்டுக்கள் எல்லாமே
சீராட்டும் அல்லவே.

பாராட்டுப் போதையில்தான்
பலரின்று ஆடுகிறார்.
சீராட்டில் மயங்கிச் சிலர்
சீரழிந்தும் வாடுகிறார்.

பாராட்டுப் பெறுவதற்கே
பலரின்று சேவைசெய்வார்.
சீராட்டுந் தலைவர்களிடம்
சிக்கிப்பின் சீரழிவார்.

பாராட்டுத் தேடியே
பலரின்று மயங்குகிறார்.
சீராட்டும் வேசிக்ளாய்
சில்ரதினில் வாழுகிறார்.

நல்லதைச் சொல்பவனை
நையாண்டி செய்கிறார்.
நயவஞ்சகப் பாராட்டையே
நயமென்று நம்புகிறார்..

பாராட்டுக்குப் பாராட்டாக
பழைய மொய் செய்யுவார்
பார்த்திட்டோ மென்பதற்காக
பாராட்டியுஞ் செல்லுவார்..

ஏதோவொன் றெதிர்பார்த்து
இனிப்பாகப் பாராட்டுவார்.
இவனுக்கெல்லாம் பாராட்டா....
என்றே பின்னே பேசுவார்.

ஓட்டுக்கேட்போர் உளறலும்
ஒருவிதப் பாராட்டே.
பாட்டுப்பாடும் கவிஞனிடம்
பாவமென்பதும் பாராட்டே..

பரவாயில்லை யருமையென
பழகாமலே பாராட்டுவார்.
அதுவென்னக் கேட்பதற்குள்
அவர்  விலகியோடுவார்.

ஆறுதலுக்குச் சொல்லுகின்ற
அலங்கார வார்த்தைகளை
காதலென்றுங் கொள்ளாதீர்
பாராட்டென்றென்றுந் துள்ளாதீர்..

ஆகா ஓகோ என்பதெல்லாம்
ஆசைகாட்டும் வார்த்தைகள்..
பாராட்டென நம்பித்ததான்
பல்லாயிரம் கவிழ்ந்தனர்..

உண்மையான பாராட்டினை
கண்டறியப் பழகனும்.
நன்மைதரும்  பாராட்டினை
நயம் பிரித்துப் பயனுறனும்.

உள்ளதை உள்ளெடுத்து
நல்லதைப் பகுத்தெடுத்து
சொல்லியே திருத்திடும்
சுத்தமான பாராட்டு.

உள்ளந்தொடும் பாராட்டு
உள்ளிருந்து வெளிப்படும்.
கள்ளமில்லாச் சீராட்டு
கைமாறு  தேடாது.

நொய்யில்லாப் பாராட்டு
பொய்யொழுகிப் புகழாது
மெய்விளங்கச் சீராட்டி
உய்ய வழி காட்டிடும்.

வருத்தம் செய்யாப் பாராட்டு
திருத்தம் செய்து சீராட்டும்.
ஒளிபெருகத்  தூண்டிடும்
உரிமையான  பாராட்டு.

தட்டித்தந்து வளரந்திடும்.
தடவிமுத்தம் செய்திடும்.
கட்டித் தங்கமாக்கும் நல்
பாராட்டுஞ் சீராட்டும்..


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.










No comments:

Post a Comment