Monday, 17 February 2014

சுகமான தோல்விகள்!

சுகமான தோல்விகள்!

நிலவிடம் தோற்கிறேன்.
------------------------------------------
நீருள் சிரிக்கும்
நிலவினைத்தானே
நீந்திப் பிடிக்க முயன்றிடும் போரில்
நித்தமும் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
=====================================
தாயிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
பசியில்லை அம்மா எனக்கு
பால் மட்டும் போதுமென்றாலும்
புசிக்கும் வரையும் ஓயாத
பெற்றத் தாயிடம் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
=====================================
காதலியிடம் தோற்கிறேன்.
-----------------------------------------------
கனிந்த மொழியாள்
காதலி என்னாளிடம்
நினைந்தொரு கோபம் 
காட்டிட முயன்றும்
அணைந்திடும் அன்பில்
அன்றாடம் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
======================================
மழலையிடம் தோற்கிறேன்.
--------------------------------------------------
சிரிக்கும் மழலை
சிந்தும் மொழியால்
பறித்திடும் ஆசை 
பால்கோவா அதிலே
முறிந்தும் வீழ்ந்தே
முழுமையாய் நானும்
தோற்றுத்தான் போகிறேன்
=====================================
நண்பனிடம் தோற்கிறேன்.
----------------------------------------------
துன்ப வேளையில்
தோள் தந்தானை
இன்பம் கண்டு மகிழ்ந்திடும் நாளில்
மறந்தும் தனிமை
கொண்டாட நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
====================================
மகனிடம் தோற்கிறேன்.
------------------------------------------
அன்றாடச் செலவுக்கு
அணுகிடும் மகனை
அதட்டித் திருத்தத் துணிந்திடும் போதில்
அப்பா என்றதும்
தப்பாது நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
======================================
மகளிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
கொஞ்சும் மகளிடம்
அஞ்சாமல் அழைத்து
காதல் கண்டு கடிந்து மொழிகையில்
கண்ணீர் விழிகள்
மொழியில் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
====================================
மனைவியிடம் தோற்கிறேன்
---------------------------------------------------
ஆருயிர் மனைவி
அவளிடம் நயந்து
ஆகும் செலவுகள் 
அதிகம் என்றால்
பிள்ளைகள் காட்டி
பேசிட நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
===================================
தமிழிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
எழுதி என்னதான்
கிழிக்கப் போகிறேன்
என்றே பேனாவை 
ஒளித்தே வைத்தால்
கருத்துக்கள் வந்து
உறுத்திட நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
==================================
கர்வத்திடம் தோற்கிறேன்.
----------------------------------------------
பிறரைப் படித்திட
பேணாக் கர்வம்
கருத்துப் பஞ்சம் 
கவிதை படைத்திட
வருத்தும் போது
தேடிடும் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
==================================
அன்பரிடம் தோற்கிறேன்.
------------------------------------------
அன்பும் திறமையும்
அகிலம் நிறையவும்
அடையும் வெற்றியும் 
அவரே கிட்டவே
விட்டும் கொடுக்கலாம்
வெற்றி உரியவர்க்கும்
தோற்றும் வெல்லலாம்
தோல்வியும் சுகமே!
-------------------------------------
தோல்வியும் கூட
சுகமாய் இருக்கும்
விட்டுக் கொடுத்தும் 
வாழும் போதே.
அதுதான் தோல்வி
எனறால் நானும்
ஆயுள் முழுவதும் தோற்பேன்.
===================================
===================================


கொ.பெ.பி.அய்யா.



























No comments:

Post a Comment