இவனும் என் மகன்.!
இவனும் என் மகன் என்பதினால்
இவன் மட்டுமே மகனென்றாகுமோ!!
இவனொத்த இளைஞரெல்லாம்
என் பிள்ளைகள்தானென்பேன்.!.
இவனையிங்கு காட்சிவைத்து
இளைஞருக்குச் சாட்சியானேன்!
என்னைப்போல் என்றில்லாமல்
உன்னைப்போல் வாழ்கவென்றேன்!
பேர் சொல்லும் பிள்ளையாக
ஊர் சொல்ல வாழச்சொன்னேன்!
யார் சொல்லும் பழிக்காமல்
நேர் கொண்டு வாழ்கவென்றேன்.
இவனுக்கு வயது இருபத்தேழு
இன்னும் துணை தேடாதாளு.
அவனின் உரிமை அவனதாளு!
எவரும் இடையே நுழைய யாரு?
இவனொரு முடவியல் மருத்துவன்
இனிமை உறவே இவனது மருத்துவம்.
ஏழைக்கு இரங்கும் மனமுடையோன்.
தேவைக்கு உதவும் குணமுடையோன்.
என்மகன் இவனென்பது அருகி!
அவன் தந்தை நானெனப் பெருகி!
பெருமை கொள்ளும் அருமையாகி!
இருப்பதவனால் நான் நலமாகி!
எதிர்கால வடிவம் இளஞரின் கனவில்!
அதிர்வுகள் புரியுது ஆவது நலமே!
குதர்க்கங்களொழிந்து கோபுரம் தெரியுது!
குதிர்ந்திடுங் கல்வியில் குறிக்கோளாகுது!
தேர்ச்சியின் விகிதம் தேரிவளருது!
அயர்சசியில்லா அவசரம் விளங்குது!
முயற்சியின் பயிற்சி முழுமையாக்குது!
செயற்கை ஆக்கச் சிந்தை விளையுது!
ஆணும் பெண்ணும் நிகரென்றாகுது!
தோணும் நேசங்கள் தோழமையாகுது!
பேணும் உறவினால் பேதமை மறையுது!
காணுங்காட்சிகள் கவலைகள் தொலையுது!
புதிய உலகம் புறப்பட்டு வருகுது!
விதியும் மாறும் விந்தைகள் நிகழுது!
இளைய சமுதாயம் இணைவது புரியுது!
இதற்கெனக்காலம் கூடி மலருது!
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment