Monday, 17 February 2014

சுட்டச்சொல்லும் ஆறிடுமா?

ஒரே ஒரு சொல்!

ஒரே ஒரு சொல்லு அதன்
உறுத்தும் வினை அறியவில்லை.
ஆழத்தில் பதிந்த வடுவுதான்
அழித் தெழுதது எழுத்தில்லை

மற்றவரைத் திட்டும்போது
விட்ட சொல்லை உணரவில்லை
மற்றவர் உணர்த்தும் போதும்
மனம் தெளியத் தோணவில்லை.

உணர்ச்சியின் மயக்கத்தாலே!
உள்ளறிவை இழந்ததாலே!
மனம் மீறிக் கொட்டிவிட்டேன்
மாறி மனம் அழுதுவிட்டேன்.

விட்டக் கல்லும் திரும்பிடுமா?
சுட்டச்சொல்லும் ஆறிடுமா?
பட்ட மனம் தேறிடுமா?
கெட்ட ஞானம் மாறிடுமா?

ஒரே ஒருச் சொல்லில்த்தானே
உறவை நானே முறித்தேனே!
வருடங்கள் வளர்த்த சொந்தம்
ஒரு நொடியில்க் கெடுத்தேனே!

மீண்டும் கூடிப்பழகினாலும்
ஆண்டுப் பல ஓடினாலும்.
தீண்டியச்சொல் மாண்டிடுமா?
வேண்டிய உறவும் மீண்டிடுமா?

சொல்லுக்கென்ன வலிமையென
சோதிக்காமல் வீசி விட்டேன்
வில்லில் விட்ட அம்பாகவே
கொல்லுங் காயம் செய்ததுவோ!

முட்டாள் எனத்திட்டி நானே
முட்டாளாகிப் போனேனே!
மூடன் எனப் பேசி நானே
மூடனாகிப் போனேனே!

நித்தம் நித்தம் பார்க்கும் முகம்
நிதம் பழகிக் களிக்கும் சகம்.
முத்து முத்து உறவு சுகம்.
ஒத்த ஒரு சொல்லில் முறிந்தது

நேர் வருகை நேரும் போதும்.
நெஞ்சம் வஞ்சம் அஞ்சும் போதும்
கண்கள் நாணிக் கூசும் போதும்
கால்கள் விலகித்தடம் ஒதுங்கும்.

கவிஞர் கொ.பெ.பிச்சையா.




No comments:

Post a Comment