Tuesday, 18 February 2014

ஊனம் தடையல்ல.

ஊனம் ஒரு தடையல்ல!

ஊனம் ஒன்றும் தடையா சொல்!
மானம் ஊன்றும் மனிதா சொல்!.
ஏனம் தன்னை ஊக்கம் கொண்டால்
இமயம் கூட உச்சமா சொல்!

குறைவும் நிறைவும் குறையா சொல்!
மறையும் நிலவும் மீளுமா சொல்!
வரையும் மாதம் மறக்கும் என்றால்
வருடக்கணக்கும் வாழுமா சொல்!

மலர்வதும் கழல்வதும் பிழையா சொல்!
மறுபடி விதைத்திடக் காய்க்குமா சொல்!
உதிர்வது நினைத்து ஓய்ந்தது நின்றால்
உலகம் வாழ்வதும் நிலைக்குமா சொல்!

பாம்புக்கு என்ன கால்களா சொல்!
படுத்தும் அதுவும் கிடக்குமா சொல்!
கால்கள் அதனைக் குறையென அறிந்தால்
காலம் வாழ்ந்தும் தழைக்குமா சொல்.

பறவைக்கு உண்டோ கைகளோ சொல்!
உறவிடம் உதவி தேடுமோ சொல்!
கூடுகள் கட்டிக் குடித்தனம் கண்டால்
மாடங்கள் தேடச் சொல்லுமா சொல்.

வௌவால்க் கண்ணும் உண்டோ சொல்!
வழித் துணைக்கும் கெஞ்சுமோ சொல்!
ஒலி அலை நுட்பம்  ஒன்றதனால்
உலகம் அதனின் வசமிலையா சொல்!

வெண்பூனை அறியுமோ செவியறிவு சொல்!
உண்பனத் தேடாதோ உணர்வினால் சொல்!
அசைவுகள் அறிந்தது வாழ்வது வென்றால்
ஆறறி மனிதன் தோற்பதோ சொல்!

ரூஸ்வல்ட் அவரை அறிவாயோ சொல்!
தோசம் இளம் பிள்ளை வாதமோ சொல்!
அமெரிக்க நாட்டை உயர்த்தித் தந்தார்
அவரைத் தடுத்ததா ஊனம் சொல்!

ஜான்மில்டன் தெரியுமா படித்தும் சொல்
காண்பது இல்லாக் கபோதியாம் சொல்!
காவியம் செய்தார் இழந்த சொர்ககம்
மேவிய ஊனம் கெடுத்ததா சொல்!

கால் அது ஊனம் தடுத்ததோ சொல்!
பாழ் அது செய்தும் படுத்துமோ சொல்!
சுதா சந்திரன் நாட்டியச் சாதனை
செய் கால் ஊக்கம் வென்றது சொல்!

இன்னும் எத்தனை இருப்பரோ சொல்!
வென்றவர் வைர ஆக்கியம் சொல்!
குறைகளை எண்ணிக் குறைபடல் கோழை
நிறைக்கும் முயற்சி சவாலே சொல்!

ஈனம் காட்டி இரப்பதோ சொல்!
ஊனம் விற்றும் பிழைப்பதோ சொல்!
மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டே
தானம் உயர்த்தல் வாழ்வெனச் சொல்!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment