கேள்விக்கென்ன விடை.
நீலவானத் தந்தையின் நிழலிலா?
நில மடந்தை அன்னையின் மடியிலா?.
கால பகவன் கருணைக் கொடையிலா?
வாழும் மனிதன் வாழ்க்கை இடையிலா?
யாரையும் கேட்டுத் தான் வந்தானா?
ஊரையும் தேடித் தான் கண்டானா?.
பேரென்ன ஊரென்ன பிறப்புக்கு முன்னேதான்?
யாரென்ன சீரென்ன இறப்புக்குப் பின்னேதான்?
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைவெளி தூரமா?
உறவுக்கும் பிரிவுக்கும் நடைவழி பாரமா?
இருக்கவும் பறக்கவும் எது அது நேரமா?
பிறக்கவும் மறக்கவும் விதி எங்கே ஓரமா?
நாளென்ன பொழுதென்ன நாழிகைக் கணக்கென்ன?
ஊழென்ன தொழுதென்ன உற்றது உனக்கென்ன.?
வாழவும் வீழவும் வந்ததன் சிறப்பென்ன?
ஆளவும் தாழவும் ஆசையின் பொருளென்ன?
காதலென வொன்றுதான் கருவிலே வந்தததா?
சாதிபின் பொருளாலே சண்டாளம் நுழைந்ததா?
வேதங்கள் காதலுக்கு வேலியிட முளைத்ததா?
சாதலே விடுதலையா சாத்திரங்கள் பிழைத்த’தா?
கேள்விக்கென்ன விடையுண்டோ கேட்டுயார்
சொல்லுவீர்?
கோளுக்குள் வேறென்ன கொண்டாடும் காதல் என்பீர்!
நாளில்லை பொழுதில்லை நமக்கிங்கு நிலையென்ன?
தோணையும் காதலன்றி துணையிங்கு வேறென்ன?
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:--அன்பர்களே!
“கரிசல்
மண்ணில் ஒரு காவியம்”
அத்தியாயம்—12
வெளியாகியுள்ளது.படித்துத்தான்
சொல்லுங்களேன்!

No comments:
Post a Comment